Thursday, March 14, 2019

பிச்சைக்காரன் கட்டிய வீடு!


பிச்சைக்காரன் கட்டிய வீடு!


“நான் மட்டும் இந்த கலியாணத்துக்கு சம்மதிக்கலேன்னா… வீடும், கூடும் இல்லாத இந்த பிச்சக்கார பயலுக்கு எவன் பெண்ணு குடுத்திருப்பான்?” கழுத்து நரம்பு புடைக்க பேசிவிட்டு அந்த மனிதன் வெளியே வந்த போது நான் அமைதியாக இராஜன் அத்தான் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தேன்.

எங்களது வீட்டுக்கென்று ஒரு மரியாதை இருந்தது அப்பா உயிரோடு இருந்தவரை. ‘வண்டாவிளை பட்டாளத்துக்காரன்’ என்றால் சுற்று வட்டாரம் முழுவதும் தெரியும். அது அப்பாவுக்கான மரியாதை!

எனது திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக நீங்கா துயில் கொண்டு விட்ட அப்பாவின் இழப்பு வேறெந்த வகையிலும் ஈடு செய்ய இயலாத நிலையில் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்து பெண் வீட்டார் ‘வீடு காணும் நிகழ்வுக்காக’ வந்திருந்த போது எங்களது உறவினர் ஒருவர் “சுமங்கலா-ளுக்கு தலைக்கு வெளி இல்லியா? பிள்ளைய இல்லாத இங்க கொண்டுபெய் பெண்ண குடுத்திருக்கியா!” என்று கூறி பரிகசித்திருந்தும், அவரது மகளுக்கு எனது கையால் கர்ப்பகாலத்து (யாக்கோட்டி) பண்டம் ஒன்றை கொடுக்க வைத்தது காலம்.  இன்று இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா நான்! இருவரும் ஆண் மக்கள்!!

காலம் பல்வேறு கட்டங்களாக தனது காற்குளம்புகளால் சிலருக்கு தக்க பாடம் புகட்டிக்கொண்டே வருகின்றது என்னோடு.

கஸாப் மருத்துவமனையில், ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் ‘பயோ-மெடிக்கல் துறையில்’ பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, இப்போது வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தின் பணிநியமன உத்தரவை அப்போது பெற்றுக்கொண்டு ஊருக்கு பறந்தவன்தான்… அப்பாவின் பாடுகள், திருமண நிச்சயதார்த்தம், பத்திரிக்கை, திருமண ஏற்பாடுகள், அப்பாவின் மறைவு, திருமணம், மனைவியின் கர்ப்பம், திருமண கடன்கள் என ஏக ‘பிஸி’யாக இருந்த நேரம். பல்வேறு இடங்களிலும் இருந்து வாங்கிய கடன்கள் மனைவியின் நகைகளை வங்கிக்கு அனுப்பியது. அதில் சில கருத்து வேறுபாடுகள் எனக்கும் மனைவிக்கும் இருந்தாலும் சில மூன்றாவது நபர்கள் உள்ளே நுழைந்து பெரிதாக்க முயற்சித்தது சற்றே வலியைத்தந்தது.

பெரும்பாலும் ‘மணவிலக்கு’ (விவாகரத்து) பெறும் தம்பதியருக்கு நடுவில் மூன்றாவது நபர்களின் தலையீடு கண்டிப்பாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ இருக்கும்; இருந்திருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் துணையைப் பிரிந்து வாழ்பவரெனில், உங்களை நீங்களே அலசிப்பார்க்கும் போது தெளிவாக புரியும் ஏன் நான் என் மனைவியைப்பிரிந்தேன் என்று! வெறும் காசு தேறாத காரணத்தை உறவுகளோ, நட்புக்களோ ஊதிப்பெரிதாக்கி உங்கள் முன் படைத்திருப்பார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கையை இழந்திருப்பீர்கள்.

2011 செப்டம்பர் மாதம் 15-ல் திருமணம் முடிந்தது; மறுவாரமே முதற்பகுதி நகைகள் வங்கியில் தஞ்சம் கொண்டன. அடுத்த வாரத்தில் அடுத்தபகுதியென, தாலி மற்றும் சொற்ப நகைகள் தவிர்த்து அனைத்துமே வங்கியில் சோர்ந்து படுத்திருந்தன. மனைவியின் கண்ணீர், அவளது உறவினர்களின் குத்தீட்டி சொற்கள் என, நட்டநடுச்சாலையில் ஆடைகளைக்களைந்து நிற்பவனுக்கு நிகரான அவமானமும், கேவலமுமாக என்னைப்பிடுங்கித்தின்னத் தொடங்கின. பணியோலை பெற்று வந்த நிறுவனத்தில் வேலைக்கான ‘விஸா’ கிடைப்பதில் தாமதம் ஏற்பட செலவுக்கே பெரும்பாடான நிலை. ஆனால் எத்தனை பேர் தூற்றினாலும் எனது மாமனார் வீட்டில் ஒரு சிறு கீறல் கூட இல்லை எனக்கான மரியாதையில். அவ்வகையில் சற்றே நிம்மதி கொண்டிருந்தேன்.

திருமணமான புதிதில் அவளது உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அந்த வீட்டுக்கும் சென்றிருந்தோம்.
“ரெண்டு வருஷம் மஸ்கட்-ல இருந்தன்னு சொல்லிய. என்னத்த மீதி எடுத்த நீ? எல்லாத்தையும் வீட்டில குடுத்தியோ? பிள்ளைக எல்லா உருப்படியும் இப்பமே பெய்யாச்சே! கல்யாணம் எடுக்குக்கு முன்ன சம்பாதிக்கணும். இனி அப்ப வீடு? அது எளையவனுக்கா ”
சோறு சாப்பிட்டபின் இந்த வார்த்தைகளை கேட்கவேண்டியதாக போய்விட்டது. மரியாதை என்ற ஒன்றை இழந்தபின் என்ன உறவு? என்ன சொந்தம்? அன்று அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தது. சுமார் ஏழாண்டுகள் கடந்து விட்டன. இத்தனைக்கும் அவர் எனது மாமியாரின் தங்கைகளில் ஒருவர்!

சில நேரங்களில் எழும் அவமானமும், வலியும், வெறியும், வைராக்கியமும் சிலரை கொலை செய்யத் தூண்டும், சிலரை தற்கொலைக்குத் தூண்டும் இன்னும் சிலரை சாதிக்கத்தூண்டும். கடைசி வரிசையில் நான்.

அடுத்து வந்த நாட்களில் சில உறவினர்கள் வீட்டுக்கு சென்று வந்தபின், கொல்லக்குடிவிளை இராஜன் அத்தான் வீட்டுக்கு சென்றோம். அங்கே குடும்பத்தில் வயதான மாமா, மாமி இருக்கின்றார்கள். நாங்கள் சென்றிருந்த நேரம், மேலே குறிப்பிட்ட நபரின் கணவரும் வந்தார். வெளியில் மழை தூறிக்கொண்டிருந்தது. நானும், மனைவியும், வீணாவும் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தோம். சற்று போரடிக்க வீட்டுக்குள் திண்ணையில் சென்று அமர்ந்தேன். அப்போது அந்த மனிதன் அந்த வீட்டின் மாமா, மாமியிடம் உச்சஸ்தாயியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தான் உள்ளறையில் இருந்து. சரி, நமக்கேன் வம்பு என்று அருகில் கிடந்த பத்திரிக்கையை அன்று நான்காம் முறையாக புரட்டியபோதுதான் தெரிந்தது அவன் என்னைப்பற்றித்தான் குறிப்பிடுகிறான் என்று.

“நான் மட்டும் இந்த கலியாணத்துக்கு சம்மதிக்கலேன்னா… வீடும், கூடும் இல்லாத இந்த பிச்சக்கார பயலுக்கு எவன் பெண்ணு குடுத்திருப்பான்?” கழுத்து நரம்பு புடைக்க பேசிவிட்டு அந்த மனிதன் வெளியே வந்த போது நான் அமைதியாக இராஜன் அத்தான் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தேன். என்னை அங்கே எதிர்பார்க்காத அவனது முகத்தில் அதிர்ச்சி கலந்த வெளிறிய புன்னகை. அதுபோலவே அந்த மாமா, மாமியிடமும். திரும்பி வரும்போது மனைவி கேட்டாள் ‘ஏன் ஒரு மாதிரி இருக்க?’ பதிலுக்கு சிறிய புன்னகை மட்டுமே என்னிடமிருந்து.

வேறு சில முக்கியமான (வெளியில் சொல்லவியலா) காரணங்கள் இருந்தாலும், என்னை பிச்சைக்காரன் என்று ஏளனமாக குறிப்பிட்ட அந்த நபரின் வார்த்தைகள் இன்றும் கூட இதோ இப்போதும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

பிச்சைக்காரனின் வீட்டில் பணக்காரர்களுக்கு இடமுண்டு; பணத்திமிர் பிடித்தவர்களுக்கு அல்ல!

இன்று எனது வீடு சுமார் நாற்பது இலட்சங்களை முழுமையாய் விழுங்கி விட்டு எழுந்து நிற்கின்றது கம்பீரத்தோடு! அதில் கடன் இருந்தாலும் ஒரு ஆனந்தம்!

இந்த பிச்சைக்காரனின் வீடு எழும்பியதில் அப்பா வகையில் அம்மாவிடமிருந்து கிடைத்த ஏழு இலட்சங்கள், மீதி அனைத்தும் என் மனைவிக்கு அவளது வீட்டில் கொடுத்த நகைகளும், எங்களது சிறிய சேமிப்பும், மச்சான் மற்றும் மாமா, மாமி, அவளது தங்கை மற்றும் கணவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும், எல்.ஐ.சி-யின் கடனும் என்பதனை நான் கூறியே ஆகவேண்டும் 🙂

அம்மாவிடமிருந்து எல்லா காசையும் வாங்கிக்கொண்டுதான் என் வீட்டை நான் கட்டி இருக்கின்றேன் என்றெண்ணுகின்ற சில உறவுகள். ஒன்றாயிருந்த தேன்கூடு கலைந்து விட்டது. இனி அவரவர்க்கு வீடுகளையோ, கூடுகளையோ கட்டிக்கொண்டாக வேண்டும் எனும் நிர்ப்பந்தம். சகோதரர்கள் திருமணமான பின்பும் சகோதரர்களாகவே வாழ்வது என்பது ஒரு வரம். சில வல்லூறுகள் நண்பர்கள் என்கிற போர்வையில் தூண்டி விட்டு குளிர்காய்வதை புரிந்து கொண்டாலே பல பிணக்குக்களும் தீர்ந்துவிடும். பணம் ஒருபோதும் நம் பிணத்திற்குப்பின் வரப்போவதில்லை! அவ்வளவுதான்… எளிய தத்துவம்!!
அம்மா, அக்கா, அத்தான் என அனைவருமே ஊக்கத்தையும், பின்னாலிருந்து தட்டிக்கொடுத்தலும் செய்திருந்தாலும்… களப்பணி என்று ஒன்று இருக்கின்றது. வீட்டுக்காக கடை வியாபாரத்தை தள்ளி வைத்து விட்டு மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் மாமனார், எப்போதெல்லாம் பணமுடை வருகிறதோ அப்போதெல்லாம் ஏதேனும் வகையில் புரட்டி தந்த மச்சான், ஒரு திருவிழா போல இந்த வீட்டை பார்த்துக்கொண்டிருக்கும் மாமியார் என தரையில் கிடந்தவனை தூக்கி துண்டுடுத்தி அமரவைத்திருக்கின்றார்கள். இப்போது கம்பீரமாய் வீட்டை பார்க்கின்றேன்!

ஒவ்வொருமுறை தளரும்போதும் ஊக்கம் தரும் மனைவி, சில நேரங்களில் கண்ணீர்த்துளி விழும் அவள் கண்கள்… அதற்கு பயந்தேனும் ஓட்டத்தை முடிக்க வேண்டும் என்ற உந்துதல் என மெதுவாக டிசம்பர் 13-க்கு அருகில் வந்து விட்டோம்.

இப்போது உங்களை அழைக்கின்றோம் எங்கள் வீட்டின் விழாவுக்கு!
அன்பு வாழ்த்துக்களை கூடைகளில் கொண்டு வாருங்கள்…
வாழ்த்துக்களை விட்டுவிட்டு செல்லுங்கள்!
மறுமுறையும் இதே அன்போடு வாருங்கள்!
அழைப்பு மணியில் உங்களது புன்னகையை பதித்துவிடுங்கள்;
அது மறுமுறை வாசலை திறந்தே விட்டிருக்கும் உங்களுக்காக!
-ஜெயன் வர்கீஸ்
21.11.2018

நவீனங்களும் வரலாற்றழிவும்!


நவீனங்களும் வரலாற்றழிவும்!


பல ஆண்டுகளுக்கு முன்பு தேவசகாயம் பிள்ளை ஆலயம் (மவுண்ட்), காற்றாடிமலை சென்றிருந்தேன், சில தகவல்களை சேகரிப்பதற்காக. அங்கிருந்த பங்குப்பணியாளரை சந்தித்தபின் ‘மவுண்டு’க்கு ஏறினேன்.
அது எனக்கு புது அனுபவம். சிறு வயதுகளில் பெற்றோருடன் இதே மவுண்டுக்கு வந்தபோது முழுவதும் பாறைகளாக இருந்தன. பாறைகளின் நடுவே கிடைக்கும் ஒற்றையடி பாதையில் ‘காரை’ முற்களும், இரு மருங்கிலும் ‘உடை முள் மரங்களுமாக’ இருந்தன. அரணை, ஓணான்கள் கால்களினிடையே ஓடி மறையும். நடுவெயிலில் அந்த பாதையில் உச்சி நோக்கி சென்று, உடனே கீழே இறங்கி வருவதென்பது குதிரைக்கொம்பு!
தேவசகாயம் பிள்ளை ‘முட்டிடிச்ச பாறை’யில் எண்ணெய் ஊற்றி பின் தண்ணீர் குடித்து இளைப்பாறி… பக்கத்து ஆலயச்சுவற்றில் அம்மா, அப்பாவிடம் அடம்பிடித்து 50பைசா அல்லது 25பைசாக்களை (5, 10, 20 காசுகள் அலுமினியத்தாலானவை) ஒட்ட வைத்தபின் வீட்டுக்கு வந்த நினைவுகள் நிழலாடின.
ஆனால் அன்று (இப்போது இன்னும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்) அந்த பக்தியோ, ஆர்வமோ எழவில்லை. காரணம் கீழே…
தேவசகாயத்தை சங்கிலியால் பிணைத்து தர தரவென்று இழுத்துப்போன பாறையிடுக்குக்களும், முட்தரைகளும் “மார்பிள், டைல்ஸ்-களாக” மாறிப்போயின. உட்சபட்ச கொடுமை அந்த மார்பிளை நன்கொடையாக வழங்கிய நிறுவனத்தின் பெயர் ‘முட்டிடிச்ச பாறை’க்கு அருகில் இருந்தது. அவருக்கான, அவரது நிறுவனத்திற்கான அதிகாரப்பூர்வ விளம்பரம் அது! அது டயோசிஸால் (மறைமாவட்டத்தினரால்) அங்கீகரிக்கப்பட்டதென்பது வருத்தமான உண்மை!
எனது சிறுவயதில் நான் அந்த கரடு முரடான பாதைகளில் நடந்து, கை கால் சிராய்ந்து, ‘மணியடிச்சான் பாறை’க்கும், ‘முட்டிடிச்சான் பாறை’க்கும் சென்றதை… எனது பிள்ளை இலாவகமாக மார்பிளில் கடக்கிறான். எனில் அந்த மனிதன் பட்ட பாடுகளை எப்படி இவர்கள் நினைவுக்கு கொண்டு வருவார்கள் அவரது வரலாற்றைப்படிக்கும் போது?
மார்பிளும், டைல்ஸ்-ம் அல்லவா அவனது நினைவுக்கு வரும்?
வேளாங்கன்னி மாதா ஆலயத்தில் முன்பு பெரிய குளம் இருந்திருக்கின்றது. மாதா காட்சி கொடுத்த இடம் அது. மாதா குளம் என்பார்கள்.
எனது அம்மா, அப்பா, மாமா, மாமியார் வரை குளத்து நீர் எடுத்திருக்கின்றார்கள். எனது சிறுவயதிலேயே அந்த குளம் காணாமல் போயிருந்தது. நான் மாதா குளத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. இப்போது அந்த குளம் “கிணறாகி” இருக்கின்றது. “ஆவ் மரியா; ஹெயில் மேரி” என்பதை ஓட்டை போட்டு கிணற்றுக்குள் உளிந்து பார்க்க விட்டிருக்கின்றார்கள்.
எல்லாமே வியாபாரம்தான்… நவீனத்துவங்கள் எல்லாமே வரலாற்றை அழித்தொழித்திருக்கின்றன!
கன்னியாகுமரியில் வட இந்தியரான விவேகானந்தர் 1892 டிசம்பர் 25-ல் மூன்று நாட்கள் கடுந்தவம் செய்த பாறையில் 1970-ம் ஆண்டு விவேகானந்தர் பாறை அமைத்திருக்கின்றனர். ஆனால் திருவாங்கூர் மன்னர்களின் போர் வீரர்களின் சித்திரவதைக்குப்பயந்து மீனவர்கள் (கிறித்தவர்கள்) அதே பாறையில் காலங்காலமாக நட்டு வழிபட்டு வந்த கற்குருசொன்றை பிடுங்கியே விவேகானந்தர் மண்டபம் அமைத்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. கள ஆய்வொன்றில் கல்லூரி காலத்தில் எனக்குக்கிடைத்த நம்பத்தகுந்த தகவல்.
ஆக, வரலாறுகளும், நவீனத்துவங்களும் ஒருபோதும் இணையத்தகுதியற்றவை. இணைந்தால் வரலாற்றை நவீனத்துவம் தின்று விடும்!!
-ஜெயன் வர்கீஸ்
05.01.2019

இளைஞர்களும் சந்திக்கத் தயங்கும் வாலிபமும்!


இளைஞர்களும் சந்திக்கத் தயங்கும் வாலிபமும்!


“எனக்க பிள்ள அங்கயும் இங்கயுமாட்டு கொறய கஷ்டப்பட்டுட்டு வீட்டுகு வந்தான். அங்க சென்னையில, பெங்களூர்ல சாப்பாடு செரி இல்லன்னு கரைவான் போணுல. ஒடம்பு உருவி போச்சு பிள்ளே. அதான், இனி இஞ்சோட்டு கெடந்தா மதின்னு, இப்ப கொத்தனுக்கு கையாளா பெய்ட்டிருக்கியான். என்னவெங்கிலம் சோலி உண்டுன்னா செல்லு பிள்ளே!”

“நான் மூணு நாலு லெட்சம் செலவு பண்ணியிருப்பேன் பாத்துக்க பிள்ளே இந்த பயலுக்காக. தவப்பன்  இருந்த சமயமே அவனுக்கு வேறெ எங்கயம் போறதுக்கு மனம் இல்ல. மத்த டிரைவர் ச___ -க்க பயலுவ படிச்ச படிப்புதான் இவனுக்கும். கப்பல் எப்போ கரைக்கு வருமுன்னே தெரியாதாம். நல்லா கஷ்டமாம் பாத்துக்க. சோறு கிட்டாது. அவுனுவளுக சாப்பாடும் நமக்கு ஒத்து வராது இல்லியா பிள்ளே. நல்லா கஷ்டப்பட்டுட்டான்!”

மேற்கூறிய இரு இளைஞர்களும் பொறியியல் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்கள். ஒரு சிறு உதாரணம்தான் மேற்கூறியவை. இவர்கள் போல நிறைய இளைஞர்கள் எங்கள் ஊரிலும், சுற்று வட்டாரத்திலும் சுற்றித்திரிகின்றார்கள்.

ஒரு இளைஞன், தனது பொறியியல் படிப்பின் சில தோல்வியுற்ற தேர்வுகளை எழுத விரும்பாமல், கான்க்ரீட் வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றான். வீட்டுக்கு வீடு பொறியியல் மாணவர்கள்; வீடு கட்டும் தொழிலாளர்களாகவும் பொறியியல் மாணவர்கள்!!

ஒரு வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன்னறையில் பெரிய பெரிய பாத்திரங்களை கவிழ்த்து வைத்தது போல, அறை முழுதும் நிரம்பி வழிந்தது. விசாரித்ததில் அதன் பெயர் ‘டோல்’ எனும் இசைக்கருவியாம். படிக்கும்போதே ‘சைடு பிசினஸ்’ என்று அவனது தாயார் சொல்லி சிரித்தார்.

அவர்களில் சிலரை காவல்துறை பிடித்து சென்றிருக்கின்றது, ஒருமுறை கஞ்சா விற்றார்கள் என்பதற்காக. ‘ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் காசை அவனுக்கு செலவு செய்திருக்கிறேன் ஜாமீனுக்காக’ என்று ஒரு தாய் வருத்தப்பட்டார்!

இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று பெற்றோரின் செய்கை! மேற்குறிப்பிட்ட இளைஞர்களின் வாழ்வை கெடுத்ததும், கெடுத்துக்கொண்டிருப்பவர்களும் பெற்றோரே என்பதனை வேதனையுடன் பதிவு செய்கிறேன். மகன்களை/மகள்களை வெளியூருக்கும் அனுப்புவதில்லை; உள்ளூரிலும் துறைசார்தொழில் தொடங்க முனைப்பு காட்டுவதுமில்லை!

எந்த படிப்பும் படித்திராத கட்டிட ஒப்பந்தக்காரரிடம் பொறியியல் படித்த மாணவர்கள் சம்பளம் வாங்குகின்றார்கள் என்பதுதான் வேதனையாய் இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இன்னமும் சில மருந்து கடைகளில் ‘சீனியர்’ மருந்தாளுநர்களாக அந்த துறையை பெறாதவர்கள் வேலை பார்க்கின்றார்கள் என்பதும்தான்.

நண்பர் ஒருவர் திருமண நிச்சயதார்த்தம் முடித்து விட்டு மஸ்கட் வந்திருக்கின்றார். இணை என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கிறார் என்றார். என்ன படித்திருக்கிறார் என்றதற்கு ‘டிகிரி’ முடித்திருக்கிறார் என்றார்.

நெய்யூரில் ஒரு மின்னணுவியல் கடையில் பெண்ணொருவர் வேலை செய்கிறார். அவரிடம் பேசியபோது ‘பொறியியல் முடித்திருக்கிறேன் அண்ணா. சென்னையிலதான் வேலை பார்த்தேன். அப்பா, அம்மாவுக்கு  நான் அங்கே  வேலை செய்றது பிடிக்கல. எனக்கு வீட்டில இருக்கிறது பிடிக்கல. அட் லீஸ்ட் ஏதோ வேலை செய்யலாமேன்னுதான், இந்த கடைக்கு வந்திட்டிருக்கேண்ணா’ என்றார். அவரது துறைக்கு சற்றேனும் ஒத்துப்போகின்றது. மகிழ்ச்சியாய் இருந்தது.

‘என்ன பெரிதாக சென்னையில் போய் சம்பாதித்து விடுவான்?’ என்று கேட்பவர்களுக்கு, சென்னையோ இல்லை பெங்களூரோ அவை சம்பாதிப்பதற்கான இடம் இல்லை கல்லூரிக்குப்பின். வாழ்க்கையை படிப்பதற்கான இடங்கள்!

காலையில் ஏதோ இருப்பதை சாப்பிட்டு விட்டு அல்லது ‘வெளியில பாத்துக்கிறேண்டா. பை!’ என தோள்பையை போட்டுக்கொண்டு ஒரு தேனீரும் பிஸ்கெட்டும் மட்டும் சாப்பிட்டு விட்டு, மதியம் வரை அலுவலகத்தின்  அல்லது மருத்துவமனைகளின் தண்ணீரை வயிற்றுக்குள் நிரப்பி விட்டு, பசியை துரத்தி, மீண்டும் வரக்கூடிய ‘லஞ்ச்’ என்னும் மதிய உணவுக்கு (காசு இருந்தால்) ‘லிமிட்டட் மீல்ஸ்’ இல்லாவிட்டால் எலுமிச்சை ஜூஸ் குடித்து விட்டு, இரவில் வரும் நண்பன் அபி, ஜெகன் அல்லது தம்பிகள் விஜு, ஜெனீஸ்-களை எதிர்பார்த்திருந்த காலம் என்னது. பல மதியங்களை நண்பர் சிராஜ் நிரப்பியிருக்கிறார்.

குப்பைக்கூடையில் ஞாயிற்றுக்கிழமைகளில்/ நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடும் நேரங்களில் நிலக்கடலை தோடுகள் கிடக்கின்றன என்றால் நான் சோறு சாப்பிடவில்லை என்று தம்பி ஜெனீஸ் கண்டுபிடித்து விடுவான். மாதத்தின் தொடக்கத்தில் பணக்காரர்களாக இருக்கும் நாங்கள் சில நாட்களிலேயே வறுமைக்கோட்டுக்கும் கீழே சென்று விடுவோம்.

ஒருமுறை நண்பன் அபியும், நானும் கே.கே.நகர் ஜெகன் அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தோம். அண்ணி கேட்டார்கள் ‘சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?’ ‘அண்ணி எதுவுமே வேண்டாம் . இப்போதான் சாப்பிட்டோம் ரெண்டுபேரும்’ அண்ணி எங்களை முறைத்துவிட்டு ‘சென்னையில பேச்சுலர் பசங்க சொல்ற சேம் டயலாக் இது. கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்’ நெகிழ்ந்து போய் விட்டோம் இருவரும்.

ரவிஷங்கர் எனும் உடன்பிறவா அண்ணன் பல வேளைகளில் உதவியிருக்கிறார். அம்மாவுக்கும், தங்கைக்கும் கைப்பேசி வாங்கிக்கொடுக்க என்னால் முடிந்தது என்றால் அது இவரால்தான். சென்னையில், சென்னையை பிறப்பிடமாகக்கொண்ட ரவிஷங்கர், நாகர்கோவிலின் ஏதோ ஒரு மூலையிலிருந்து பிழைப்பு தேடி வந்த எனக்கு உதவ வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனால், காலம் சில நல்லவர்களை கூடவே துணைக்கு அனுப்பி கைகட்டி வருகிறது நம்முடன்!

பேருந்துக்கு காசு இல்லாமல் தாம்பரத்தில் இறங்கி பழவந்தாங்கலுக்கு நடந்து வந்திருக்கிறேன் ஒருமுறை. சில முறைகள் ஈக்காட்டுத்தாங்கல் (அம்பாள் நகர்) அலுவலகத்தில் இருந்து பழவந்தாங்கலுக்கு நடந்திருக்கின்றேன். இருமுறை வள்ளுவர் கோட்டத்திலிருந்து கலெக்டர் நகர்வரை காசின்றி நடந்திருக்கின்றேன்.

இன்று மஸ்கட்-ல் எனது சொந்த மகிழுந்தில் பயணிக்கிறேன் என்றால் அதற்குக்காரணம் எனது நண்பர்களும், எனது சென்னையும்தான்!  சென்னை தந்த வாழ்க்கை அடித்தளம்தான்… அது அப்பா, அம்மாவைக்கடந்து ஒரு வாழ்வு இருப்பதனை முன்கூட்டி உணரவைத்தது. இப்போது இனிக்கிறது!

பெற்றோர்களே! பெற்றோர்களாகப்போகும் நண்பர்களே!
பிள்ளைகளை கஷ்டப்படவிடுங்கள். அது அவர்களுக்கான வாழ்வை தேடிக்கொள்ள வழி வகுக்கும். எங்களது வீட்டில் அப்பாவின் வருமானம் மட்டுமே என்றாலும் சாப்பாட்டிற்கு என்றுமே கஷ்டம் வந்ததில்லை. ஆனால் நான், தம்பி சென்னையில் சாப்பாடு இன்றி தவித்திருக்கிறோம். அது பல அனுபவங்களை எங்களுக்கு தந்திருக்கின்றது. உங்கள் பிள்ளைகள் முடிவெடுக்கத்தெரியாமல் தற்கொலைக்கு முயலும்போது நீங்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை தடுப்பதற்கு. பிறந்த பிள்ளைக்கு சாப்பாடு போடுவதற்கு வக்கற்ற உங்கள் பிள்ளைகளிடம் “டேய்! அவளை தூக்கிட்டு வாடா, நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!” என்று கூறாதீர்கள். அவனது பிள்ளைக்கு பால்பவுடர் வாங்கிக்கொடுக்கும் நேரம் உங்கள் கையை எதிர்பார்ப்பான்!!

“வறுமையில் நேர்மை” என்பதனை சென்னை எனக்கு கற்றுக்கொடுத்தது. இன்றுவரை (என் மனதுக்கு) பெரும்பாலும் பிறழாமல் வாழ்ந்திருக்கிறேன்; வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.

கட்டாந்தரைகளும், கருங்கற்களும், முட்களும் நிறைந்த வாழ்க்கையை  நான் அடிக்கடி திரும்பிப்பார்ப்பதுண்டு. வாலிபத்தை எதிர்கொண்டு வாழ்ந்திருக்கிறேன், ஓடி ஒளியவில்லை என்பதனால் எனக்கும் சற்று திமிருண்டு!

-ஜெயன் வர்கீஸ்
10.02.2019

காவிகளால் குத்தகைக்கு எடுக்கப்படும் காமராஜர்!


காவிகளால் குத்தகைக்கு எடுக்கப்படும் காமராஜர்!

இது சாதிக்கான பதிவல்ல… அவ்வாறு தோன்றுமாயின் உங்களது கண்ணாடியை கழுவி மீண்டும் படிக்கவும்.

ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்பாக காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க மற்றும் சில நாடார் அமைப்புக்களால் குத்தகைக்கு எடுக்கப்படுவார் கர்மவீரர் காமராஜர். அப்போதெல்லாம் அவரது சிலைகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து, கூட நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வர். மறுநாள் பத்திரிகைகளில் ‘க்ளோஸ்-அப்’ விளம்பர அழகிகள் தோற்றுப்போகுமளவுக்கு பல்லை இளித்துக்கொண்டு நிற்பார்கள். மாலை அலங்காரங்களுக்குப்பிறகு, வழக்கம்போல, காமராஜர் காக்கைகளுடன் உரையாடிக்கொண்டிருப்பார்!

கடந்த சில ஆண்டுகளாக இவர்களது வரிசையில் காவிக்கட்சியினரும் காமராஜருடன்!

காமராஜர், பெரியார் போன்றோர் யாரையெல்லாம் தமிழகத்திற்குள் காலூன்றக்கூடாது என்று எதிர்த்தனரோ, அந்த தான்தோன்றித்தனமான ஆரிய வல்லூறுகள், அவரது சொந்த சாதியினரைக்கொண்டு இந்த மண்ணை பிடிக்க நினைக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்களால் தீண்டத்தகாதவர்கள் என்றும் கறுப்பர்கள் என்றும், (தமிழர்களை) அந்நியதேசத்தவர்கள் என்றும் கூறி வந்த (வரலாற்றை அறிந்தும்), கேவலம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் அவர்களது  கால் நக்கிப்பிழைக்க வழி தேடும் சுயசாதியினர்தான் பெரிய தீமையாக உருவெடுக்கின்றனர்.

பார்த்தீர்களேயானால், நாடார்கள் அதிகமாக வசிக்கும் குமரி மாவட்டத்தின் பாராளுமன்றத் தொகுதிக்கு இந்து நாடார் ஒருவரை அறிவித்து இருமுறை தொகுதியை பெற்றுவிட்டனர். ஏனெனில் இங்கு சாதி கலந்த போட்டியும் தேவைப்படுகிறது சிலநேரங்களில் ஊறுகாயாக!

நாகர்கோவில் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்ற வேட்பாளர்கள்.

ஆண்டு
வெற்றி வேட்பாளர்
கட்சி
இரண்டாவது இடம்
 கட்சி
1951Marshal A. NesamonyTNCSivathanu PillaiIND
1957P. Thanulinga NadarINCChellaswamyIND
1962Marshal A. NesamonyINCP. VivekanandaIND
1967Marshal A. NesamonyINCM. MathiasSWA
1969 (by-election)K. KamarajarINCM. MathiasIND
1971K. KamarajarINCM. C. BalanDMK
1977Kumari AnanthanNCOM. MosesINC
1980N. DennisINC (I)Pon. VijayaraghavanJNP
1984N. DennisINCPon. VijayaraghavanJNP
1989N. DennisINCD. KumaradossJD
1991N. DennisINCP. Mohammad IsmailJD
1996N. DennisTMC (M)Pon. RadhakrishnanBJP
1998N. DennisTMC (M)Pon. RadhakrishnanBJP
1999Pon RadhakrishnanBJPN. DennisINC
2004A. V. BellarminCPI (M)Pon. RadhakrishnanBJP

கன்னியாகுமரியாக மாற்றி அமைத்தபின் வெற்றியாளர்கள் விவரம்:
                                                  ஆண்டு
வேட்பாளர்
கட்சி
2009J. Helen DavidsonDravida Munnetra Kazhagam
2014Pon RadhakrishnanBharatiya Janata Party

கடைசியாக 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 5 கிறிஸ்தவர்களுக்கும் ஒரு இந்துவுக்கும் போட்டி நடந்தது. கிறிஸ்தவர்களின் வாக்குக்கள் சிதறவே இந்து வெற்றி பெற்றார். அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களின் வாக்குக்களையும் இராதாகிருஷ்ணன் பெற்றிருந்ததாலேயே அவரால் அங்கே வெற்றி பெற முடிந்தது என்பது உண்மை.

Indian general elections, 2014Kanyakumari
PartyCandidateVotes%±
BJPPon Radhakrishnan3,72,90637.62+4.38
INCH. Vasantha Kumar2,44,24424.64+24.64
AIADMKD. John Thankam1,76,23917.78+17.78
DMKF. M. Raajarathinum1,17,93311.90-29.91
CPI(M)A. V. Bellarmin35,2843.56-7.62
AAPS. P. Udayakumar15,3141.55+1.55
NOTANone of the Above4,1500.42+0.42
Margin of victory1,28,66212.98+4.41
Turnout9,90,74267.50+2.51
Registered electors14,67,796

எவருமே எதிர்பார்க்காதவகையில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 2,44,244 வாக்குக்களை பெற்றார். இது இன்னமும் காங்கிரசுக்கான குமரியின் இருப்பையே காட்டுகின்றது. காரணம், குமரியை கேரளத்தில் இருந்து பிரித்து தாய்த்தமிழகத்துடன் இணைத்தபோது காங்கிரசினரே உயிர்த்தியாகம் செய்தனர். காவிகள் காமராஜரை கொல்லப்பார்த்தார்கள் டெல்லியில்! அந்த வரலாறு இளந்தலைமுறைக்கும் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது குமரியில்.

எனவேதான் மார்ஷல் நேசமணி அவர்களை மூன்று முறை நாகர்கோவில் ‘பாராளுமன்றத்தில்’ அமர்த்தி அழகு பார்த்தது. டென்னிஸ் அவர்களை ஆறு முறை டெல்லிக்கு அனுப்பியது. வரலாறு தெரியாத காவிகளை, என்ன பேசுகிறோம் என்று அறியாத காவிகளை, தமிழனின் மானத்தை வாங்குவதற்கென்றே பிறந்த சில சுய சாதி சாயம் பூண்ட காவிகளை களைவதே நலம் பயக்கும் இத்தேர்தலில்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வசந்தகுமார் அவர்களின் வாக்குக்களையும், திமுக பெற்ற வாக்குக்களையும் கூட்டிப்பார்த்தால் 2,44,244 + 1,17,933 = 3,62,177 வாக்குக்கள் (இதில் இந்துக்கள், இஸ்லாமியரின் வாக்குக்களும் உண்டு)

அதுபோல இராதாகிருஷ்ணன் அவர்கள் பெற்ற வாக்குக்கள் 3,72,906 + அதிமுக பெற்ற வாக்குக்கள் 1,76,239 = 5,49,145 வாக்குக்கள் (இதில் கிறிஸ்தவர்களின், இஸ்லாமியரின் வாக்குக்களும் உண்டு)

இங்கே சாதி ரீதியான அரசியல் (பெரும்பாலும்) எடுபடாது. ஆனால் மத ரீதியான அரசியல் முக்கியத்துவம் பெறும். ஆயினும் பெரும்பான்மை நாடார்களாக இருப்பதனால் பிஜேபி-க்கு இராதாகிருஷ்ணனைத்தவிர வேறு ஒருவரை களம்  இறக்குவதென்பது குதிரைக்கொம்பே!

ஆனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி எனும்போது வசந்தகுமார் அவர்களை மட்டும் களம் காணச்சொன்னால் கண்டிப்பாக இந்த கூட்டணியின் வெற்றி உறுதி.

ஏனெனில் கடந்தமுறை அதிமுகவுக்கு கிடைத்தவை ஜெயலலிதா அவர்களுக்கான வாக்குக்களேயன்றி எடப்பாடி, பன்னீருக்கு கிடைத்தவை அல்ல! எனவே இம்முறை இவர்களின் வாக்குக்கள் பாதிக்கும் கீழே சரியும்!!

அதுபோல மார்க்சிஸ்ட்-க்கு என்று கொஞ்சம் வாக்குக்கள் உண்டு இங்கு.

ஆக, இம்முறை இராதாகிருஷ்ணன் அவர்களால் வெற்றி பெறுவதென்பது சற்று கடினமே. அப்படியே வெற்றி பெற்றாலும் இழுபறியில்தான்.
அவருக்கு சொல்லிக்கொள்வதற்கென்று தங்கநாற்கரசாலையும், மார்த்தாண்டம் மேம்பாலமும், பார்வதிபுரம் மேம்பாலமும் இருக்கின்றன. ஆனால் எதிர்ப்பென்று பார்த்தால் இத்திட்டங்களால் தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழந்த நடுத்தர ஏழை மக்களும் அவர்களின் கண்ணீரும் பெரிய மாற்றத்தை அவருக்குக்கொடுக்கும்.

நெல்லை, தூத்துக்குடி மக்கள் (திருவனந்தபுரம் செல்லும்போது) அவரைப்புகழ்வதனால் எந்த பயனுமில்லை, சொந்த தொகுதி மக்களின் வாக்குக்கள் இன்றியமையானவை!

மார்த்தாண்டத்தில் சிறுகுறு கடைகளை வைத்துப்பிழைப்பை நடத்தி வந்த சுமார் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பட்டினியில் வாடுகின்றன பொருளாதாரத்தில் நலிந்து. பெருங்குடிகள் தப்பித்துக்கொள்கின்றன எல்லாவகையான தடைகளிலிருந்தும்!

தங்கநாற்கரச்சாலை ஊர்களையும், குடும்பங்களையும், சொந்தபந்தங்களையும் தொலைதூரத்தில் நிறுத்தியிருக்கின்றது. சில பகுதிகளில் மக்களின் மேல் சாலை அமைத்து, எதிர்ப்புக்களையும் மீறி செல்கின்றது. ஆக, இவர்களின் கோபங்களையும், சொந்த நிலங்களிலிருந்து அகதிகளாக துரத்தி விடப்பட்ட கொடூரங்களையும் இவர் தேர்தலில் சந்தித்தாக வேண்டும்.

உ.பி போன்ற படிப்பறிவற்ற மாநிலங்களின் கேடுகெட்ட முதல்வர்களை  (விவரமறியா சாமியார்களை) கொண்டாடும் போக்கும், மாட்டுக்கறி மீதான தடையும், அதன் காரணமாக கொல்லப்பட்ட சிறார்கள், இஸ்லாமியர்கள், ஓடும் ரயிலில் இருந்து வீசி எறியப்பட்ட சிறுவன், கோவில் கருவறைக்குள் கொடூரமாக கற்பழித்துக் கொல்லப்பட்ட  சிறுமி, பாஜக பிரமுகர்களான எச்.ராஜா, தமிழிசை-யின் தெனாவெட்டு கலந்த அலப்பறை பேச்சுக்கள், அமெரிக்காவிலிருந்து விமானத்தில் பயணித்த இளம்பெண்ணிடம் தமிழிசை நடந்து கொண்ட விதம், தமிழீழம் தொடர்பான கேவலமான கருத்துக்கள், மீனவர்கள் மேல் அக்கறையின்மை, இலங்கை கடற்படையினரின் மீனவர் குறித்தான தாக்குதல்கள் – உயிரிழப்புக்கள், ரபேல் விமானங்கள் முறைகேடு, புல்வாமா தாக்குதல், பாஜக ஆளும் மாநிலங்களின் ஊழல், தமிழக அரசை பின்னாலிருந்து இயக்குவது, கஜா போன்ற இயற்கை பேரிடர்களுக்கு மிகக்குறைந்த இழப்பீட்டை தமிழகத்திற்கு அறிவித்தது, தங்களுக்கு சாதகமான ஆளுநர்களை மாநிலங்களில் நியமித்து முதலமைச்சர்கள் உரிமையைப்பறிப்பது, ஒரு மாநில முதல்வரின் மரணத்தில் குளிர்காயத்துடித்த அமைச்சர்களை முதல்வர்களாக்கியது, கேவலம் பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கடலை மிட்டாயில் ஊழல் செய்தது, பணமதிப்பிழப்பு என மக்களை அலையவிட்டு வாங்கிவாசல்களில் கொன்றது, தங்களது மந்திரிகளுக்கு முன்னரே அவ்விஷயத்தை கசியவிட்டு எல்லா பணத்தையும் வெள்ளையாக்கியது, அம்பானி, அதானிகளுக்கு மட்டுமே எல்லா (பங்கேற்ற) ஒப்பந்தங்களையும் திட்டமிட்டு கிடைக்கச்செய்தது, ரெயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் இரட்டைத்தன்மையை கடைபிடித்து வடஇந்தியருக்கு அனைத்துத்துறையிலும் முன்னுரிமை தந்தது, நீட் தேர்வு என்று மாணவ, மாணவிகளின் அந்தரங்க உறுப்புக்கள்வரை ஆய்ந்துவிட்டு இப்போது நாங்கள் வந்து நீட் தேர்வை அடுத்த ஆண்டில் ரத்து செய்வோம் என்பது, ஹிந்தியை தவிர்த்து ஆங்கிலம் படிப்பதால் தமிழர்கள் விரைவில் முன்னேறுவது பொறுக்காமல் ஹிந்தியை, சமஸ்கிருதத்தை திணிக்க முயல்வது, எல்லாவற்றுக்கும் மேலாக குஜராத் திட்டமிட்ட கலவரம் என அனைத்துக்கும் குமரி மக்களின் மோடி அரசு  மீதான எதிர்ப்பை ராதாகிருஷ்ணன் அவர்கள் மூலமாக தலைமைக்கு காட்ட முயல்வார்கள்.

ஒவ்வொரு விநாயகர் ஊர்வலத்தின்போதும் மீண்டும் ஒரு குஜராத் கலவரம் குமரிக்குள் நடந்துவிடுமோ என்ற பயத்தை இந்துக்களுக்குள்ளும், இசுலாமியர்களுக்குள்ளும் விதைத்து இளைஞர்களை சில இயக்கங்கள் மூலம் தவறான பாதைக்கு கொண்டு சென்றதன் பின்விளைவையும், கட்சிக்காக  அவர் சந்தித்துதான் ஆக வேண்டும்.

ஒட்டுமொத்தமாக நாடார் என்ற ஒற்றைக்காரணத்துக்காக மட்டுமல்லாமல் நல்லவர் என்ற ஒரு போர்வை அவரிடம் இருந்தது முன்பு. இம்முறை அது செல்லுமா, இல்லையா என்பதனை உண்மையான காமராஜரின் தொண்டர்களும், குமரியில் நாயர்கள் மற்றும் அவர்களுக்கு மேல் இருந்தவர்கள் செய்த கொடுமைகளை அனுபவித்தவர்களின் வாரிசுகளும் கண்டிப்பாக பாஜகவுக்கு காட்டிக்கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

குமரியில் பாஜக வெல்லுமா அல்லது காங்கிரசு இழந்த செல்வாக்கை திரும்ப பெறுமா என்பது வேட்பாளர்களின் தேர்வும், சிதறாத வாக்குக்களும் மட்டுமே நிரூபிக்கும்.

பொறுத்திருப்போம்!

-ஜெயன் வர்கீஸ்
03.03.2019

வெளிச்சம்!

வெளிச்சம்!

“இயலாமையின் விளிம்பில் இருந்து அழுதுகொண்டிருப்பதை விட இருட்டிலிருந்து வெளிச்சத்திற்காய் ஓரடி எடுத்து வைப்பது நமக்கான வாழ்வை தீர்மானிப்பதாய் இருக்கின்றது” – ஜெயன் வர்கீஸ்

வெளிச்சத்தை நோக்கியவாறு முன்னேறுவதை விட மேலானது வெளிச்சத்திற்காய் முன்னேறுவது என்பது.

மீண்டும் எழுதுகின்றேன்… “வெளிச்சத்தை நோக்கி முன்னேறுவதனை விட வெளிச்சத்திற்காய் முன்னேறுவது” நண்பர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தீர்மானிக்கப்பட்ட/நிர்ணயிக்கப்பட்ட ஒரு இலக்கு – வெளிச்சத்தை நோக்கி முன்னேறுவது! அங்கு யாரோ ஒருவர் நமக்கு முன்னரே சென்று ஒளியை ஏற்றி வைத்திருக்கிறார். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி நாமும் அதே பாதையில், தீர்மானிக்கப்பட்ட பாதையில் அந்த வெளிச்சத்தை நோக்கி பயணிக்கின்றோம். முயற்சி செய்யாமலில்லை; ஆனால் நமது முயற்சியானது நமது கையில் இருக்கும் வழிகாட்டி மூலம் சாத்தியமாகிறது. சுருங்கச்சொல்லின் ஆசிரியர் ஒருவரது வழிகாட்டுதலில், நாம் கல்விக்கூடத்தில் இறுதியாண்டுத்தேர்வு எழுதுவது போன்றது. தேர்வுகளின் முடிவில் கிட்டும் மகிழ்ச்சியில் (தேர்ச்சியில்) ஆசிரியரின் பங்கு அளப்பரியது கூடவே நமது முயற்சியும். அதுபோலத்தான் வெளிச்சத்தை நோக்கி முன்னேறுவதும்.

ஆனால் வெளிச்சத்திற்காய் முன்னேறுவது என்பது முற்றிலும் புதிதான ஒன்று. எவருடைய வழிகாட்டுதலும் இன்றி தாமாகவே, தமக்கான பாதையை உருவாக்கி, எதிர்ப்படும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெளிச்சத்தை தேடிப்பிடிக்கும் நிலை என்பது… காலங்காலமாக அடிமைகளாக நடத்தப்பட்ட ஓரினம் தனது (இனத்தின்) வாழ்வுக்கான போராட்டத்தை முன்னெடுத்து, பேரிழப்புக்களுக்குப்பின் பெறும் நிலப்பரப்பு அல்லது ஆட்சிக்கு ஒப்பானது.

இரண்டிலுமே முயற்சி இருக்கின்றது. ஆனால் முதலாமவதை காட்டிலும் இரண்டாவது மதிப்பு வாய்ந்தது! அது போற்றத்தக்கது! இழப்புக்களை வார்த்தைகளில் வாசிப்பது என்பது அதனோடு ஒன்றச்செய்யாது; அவற்றை அனுபவித்து பெறும் வெற்றி ஈடற்றது. அது கண்ணீரோடு, இழப்புக்களோடு, சுடும் கனலின் கோபத்தோடு, வேதனையோடு மகிழ்வைத்தருவது. அது நெஞ்சுரம் உள்ளவர்க்கே வாகையாக மாறும்.

“ஐயகோ! நான் இவ்வளவு படித்திருக்கிறேனே… என்னால் முன்னுக்கு வர முடியவில்லையே… எனக்கான தளம் எங்கும் சரியாக அமையவில்லையே… வெறும் கூலித்தொழிலாளர்கள் கூட இன்பமாய் வாழ்வை நகர்த்துகின்றார்களே… நான் என்ன செய்வேன்? என்னுடைய எதிர்காலம் என்னாவது?”

“இந்த வேலை பறிக்கப்படுமானால் என்னுடைய நிலைமை? என் குடும்பத்தின் நிலைமை? என்னுடைய கடன்கள்? எனது வாழ்வு? நான் என்ன செய்வேன்?”

“நான் எதிர்பார்க்காத வேளையில் எனக்கு இந்த நோய் வந்து விட்டதே? எனது வியாபாரம் படுத்து விட்டதே? எனது கால்கள் செயலிழந்து விட்டனவே? எனது பயிர்கள் கருகி விட்டனவே? வங்கிக்கடன் துரத்துகின்றதே? என்னால் என்ன செய்ய முடியும்?”

மேலே ஒருவர் மெத்தபடித்தவர் அவருக்கான தளத்தை/இருப்பை  தேடிக்கொண்டிருக்கின்றார். அவர் தனக்குக்கிடைத்த வாய்ப்புக்களனைத்தையும் வீணடித்துவிட்டு ‘ஒயிட் காலர்’ வேலைக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றார். அவரது வாழ்வு பிரச்சனையும், அங்கலாய்ப்பும் நிறைந்ததாகவே இருக்கும், அவர் எதிர்பார்த்த வேலையில் தன்னை இணைத்துக்கொள்ளும்வரை.

இரண்டாமவர் நிகழ்காலத்தில் எதிர்காலம் குறித்த கவலை கொண்டவராக வாழ்கின்றார். தன் மேல் முழு நம்பிக்கை அற்றவராக, தான் செய்யும் பணியில் திறமையிருந்தும் திறமையற்றவராக தன்னைத்தானே கீழே தள்ளி விட்டு அழுதுகொண்டு இருக்கின்றார். இருள் கவிந்து பின் வான் வெளுக்கும்வரை நற்தூக்கம் இன்றி புரண்டுகொண்டிருப்பார். சில நேரங்களில் (இந்த) கோபத்தை தன்னோடு இருப்பவர்களிடம் காட்டும் இவர் போன்றோர், பல நேரங்களில் நெஞ்சுக்குள் அடைத்து வைத்துக்கொண்டு நோய்களை வாங்கிக்கொள்ளுகின்றனர்.

மூன்றாமவர் எதிர்பாராத வேளையில்  பிரச்சனைகளை எதிர்கொள்பவர். பயிர் பலன் கொடுக்கும் என்று நம்பி கடன்களை வாங்கி, பருவமழை பொய்த்துப்போக, கடனும்-வட்டியும், பசியும்-பிணியுமாக இன்னல்களை அனுபவிப்பவர். திடீரென்று சீட்டு நிறுவனம் தலைமறைவாவது, இயற்கை பேரிடரில் சிக்கி பொருளாதாரம் நலிந்துபோவது, வாகனம் விபத்துக்குள்ளாகி அங்கங்கள் சிதைந்து போவது என பல வகையான எதிர்பாராத இன்னல்களில் உழல்பவர்கள்.

வெளிச்சம் இல்லாத இரவுகளில் வெளிச்சத்தை (பிறருக்காக) ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகும். மூன்றாமவர்களை நாம் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வெளிச்சத்தை நோக்கி அல்ல நாமெல்லோரும் வெளிச்சத்திற்காய் வந்தவர்கள்!

இன்னல்களையும், பெருந்துயரையும், இழப்புக்களையும் அவை தந்த வலிகளையும் அனுபவித்து வந்தவர்கள். அந்த வடு இன்னும் மறையாதவர்கள்!

அந்த வடுக்களை தடவிப்பார்த்து கடந்த காலம் மறவாதவர்கள்!

இந்த மூன்றாவது நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமை. நமது பிள்ளைகளுக்கும் நமது உணர்வுகளை ஊட்டுவோம். அவர்கள் (நெறி)பிறழாமல் வாழ வழி ஏற்படுத்துவோம்!

பொள்ளாச்சி மனித மிருகங்களைப்போல் நமது பிள்ளைகளை வளர்க்காமல் நாம் கடந்து வந்த கடினமான பாதைகளில் கொஞ்சமாவது அவர்களுக்கும் கொடுத்து அவர்களை நேர் வழிப்படுத்துவோம்!

“இயலாமையின் விளிம்பில் இருந்து அழுதுகொண்டிருப்பதை விட இருட்டிலிருந்து வெளிச்சத்திற்காய் ஓரடி எடுத்து வைப்பது நமக்கான வாழ்வை தீர்மானிப்பதாய் இருக்கின்றது” – நமக்கு!

“வெளிச்சத்தை நோக்கியவாறு முன்னேறுவதை விட மேலானது வெளிச்சத்திற்காய் முன்னேறுவது என்பது!”

நாம் வெளிச்சத்தை ஏற்படுத்தி விட்டோம்; இனி நமது பிள்ளைகள் நமது பாதையை பின்பற்றி அந்த வெளிச்சத்தை வந்தடையட்டும்!

-ஜெயன் வர்கீஸ்
14.03.2019

Thursday, February 28, 2019

ஸ்டாலின் ஃபெலிக்ஸ் 

நேரில் பேசியதில்லை... குமரிமாவட்டம்தான். நடக்கும் தொலைவுதான் எனது ஊருக்கும் அவரது ஊருக்கும். எனக்கு வண்டாவிளை அவருக்கு குழிக்கோடு.

பாறைக்கடை - (அந்திக்கடை) மீன்சந்தை பொலிவிழந்தபின் குழிக்கோடு மீன்சந்தைக்கு சென்று மீன் வாங்கி வந்தும் கூட ஸ்டாலின் அவர்களை அறிந்திருக்கவில்லை அப்போது. 

ஆர்குட் - என்ற ஒரு சேவையை கூகிள் முதலில் வழங்கியபோது அதன்மூலம்தான் முதலில் அறிமுகம் ஆனார் எனக்கு. பின்பு முகநூல், வாட்ஸ்அப் என கருத்துக்களை பரிமாறும் அளவுக்கு நெருங்கியிருந்தோம். 

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நெதெர்லாந்துக்கு பயிற்சிக்காக சென்றிருந்தபோதும் ஜெர்மனில் இருந்த அவரை பார்க்க முடியாமல் போனது. அப்போதும் வாட்ஸ்அப்புடன் முடித்துக்கொண்டோம். 

இதோ கடந்த ஃபெப்ருவரி 25 முதல் ஒரு வாரம் ஜெர்மன் செல்ல வேண்டி இருந்தது, அதுவும் கடைசியில் இல்லாமல் போனது. இம்முறையேனும் பார்க்கலாம் என்று வாட்ஸ்அப்பில் உறுதி கொண்டிருந்தோம். இப்போது ஜெர்மன் இருக்கின்றது ஆனால் ஸ்டாலின் உயிரோடு இல்லை. 

எனது முகநூலை விட்டு நான் வெளியே வந்தபோது, சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் வாருங்கள் என்று வழியனுப்பி வைத்திருந்தார் முன்பு. கடந்த ஈராண்டுகளாக முகநூலை பயன்படுத்தியதில்லை. ஆனால் அவர் மறைந்த அன்று எனது மனைவி அவரது முகநூலில் ஸ்டாலின் அவர்களின் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் பார்த்து என்னிடம் சொல்ல... பதறி... ஒவ்வொருவருக்காக அவரது முகநூல் கணக்கிலிருந்து செய்திகள் அனுப்பி உறுதியா இல்லையா என, இறுதியில் உண்மை என்றானதும் எதுவும் ஓடாது அமர்ந்து விட்டேன். 

மூன்று பிள்ளைகள், மனைவி என்று அழகாக இருந்த அந்த சிறு கூட்டை கலைத்து விட்டான் இறைவன். 

அவர் தொடக்கி ஆய்ந்து கொண்டிருந்த திருவாங்கூர் வரலாறும், சாதீய கொடுமைகளும் பாதியிலேயே கிடக்கின்றது. ஒரு வரலாற்று நாயகனை இறைவன் பிரித்துவிட்டான். 

நண்பர்களிடம் ஒன்றை மட்டும் முன் வைக்கிறேன்... 

பதிவுகளை, காலப்பறவையிலும் இணைத்து, இறைவனால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஸ்டாலின் எனும் பறவை, இல்லை இன்னும் உயிரோடு பறந்து கொண்டிருக்கின்றது என்று அவனுக்கு காட்டுங்கள்!

சிறகுகள் துவண்டுவிடவில்லை! நம்மூலம் இன்னும் உயர பறக்கின்றது!

அஞ்சலி - ஸ்டாலின் ஃபெலிக்ஸ் 

எனது வாட்ஸ்-அப் முகப்புப்படத்தில் நீங்கள்தான் இருக்கின்றீர்கள் உயிரோடு! 

கண்ணீருடன்,
ஜெயன் வர்கீஸ்